articles

img

அறிவியல் கதிர் - ரமணன்

பல்லுக்குள்  ஒரு தங்கச் சுரங்கம் 

நமது பற்களுக்குள் எலும்பு, குருத்தெலும்பு ஏன் நரம்பு திசுக்களைக் கூட வளர்க்கும் ஸ்டெம் செல்கள் உள்ளன என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை ஸ்பெயினிலுள்ள பாஸ்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் கேஸ்கன் இபாரெடெக்ஸ் வழிநடத்தியுள்ளார். ஒவ்வொரு கடைவாய்ப் பல்லும் (wisdom tooth) பற்கூழ் எனப்படும் மென்மையான இரத்தப்பையை அச்சாக கொண்டுள்ளது. இதுதான் பல்லை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதனுள்ளிருந்து அறிவியலாளர்கள் சில செல்களை பிரித்தெடுத்துள்ளார்கள். அவை நரம்பு, இதயம் அல்லது எலும்பு திசுக்களாக வளரும் ஆற்றல் கொண்டவை.  இபாரெடெக்ஸ் குழுவினர் இந்த செல்களை மின்தூண்டுதல் மூலம் செயல்படக்கூடிய நரம்பு போன்ற செல்களாக மாற்றியுள்ளனர். அவை உண்மையான நரம்பு இழைகள் எழுப்பும் மின் அதிர்வுகளை உண்டாக்கக்கூடியவை. சேதமடைந்த மூளை நரம்பு சுற்றுகளுக்கு இப்படி சமிக்கை அனுப்பக்கூடிய செல்கள் தேவை. அமெரிக்காவில் ஏறத்தாழ 10 மில்லியன் கடைவாய்ப் பற்கள் இளம் வயதினரிடமிருந்து நீக்கப்படுகின்றன. இந்த பருவத்தில் பற்கூழ் செல்கள் சுறுசுறுப்பாக விரிவடைகின்றன; மிகக் குறைவான மரபணு தவறுகள் கொண்டுள்ளன. இந்தப் பற்கள் வீணாக குப்பையில் வீசப்படுகின்றன. அதற்குப் பதிலாக அவற்றை திடப்பனி(dry ice) எனப்படும் வேதிப்பொருளில் பொதிந்து பின் பிரீஸர்களில் அதிலிருந்து பற்கூழானது பிரிக்கப்பட்டு திரவ நைட்ரஜனில் சேமித்து வைக்கப்படுகின்றன.  குழந்தை பிறப்பின்போது சேமிக்கப்படும் தொப்புள்கொடி இரத்த ஸ்டெம் செல்கள் போலில்லாமல் பற்கூழ் ஸ்டெம் செல்கள் சேமிப்பில் நெறிமுறைகள் குறித்த கேள்விகள் குறைவாகவே உள்ளது. தனிப்பட்ட நபரின் சிதைந்த திசுக்கள் வளர்ச்சி சிகிச்சையை குறைந்த செலவில் விரிவுபடுத்த இது ஒரு வாய்ப்பாகும். பார்க்கின்சன் நோய், அல்சையர் நோய் போன்றவற்றில் பற்கூழ் ஸ்டெம் செல்கள் நல்ல பலன்களைக் கொடுப்பது தெரிய வந்துள்ளது.  ஒருவரது சொந்த பல் ஸ்டெம் செல்களை சேமிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் அவற்றை புறக்கணிக்கும் பிரச்சனை இல்லை. பொருத்தமான கொடையாளியின் ஸ்டெம் செல்களுக்காக மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் இது பாதுகாப்பானதா என்பதற்கு நீண்ட கால தரவுகள் தேவைப்படுகின்றன. இந்த துறையில் சமத்துவம் தொடர்பான கேள்விகளும் உள்ளன. இந்த சேவை வசதியுள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. பொது உயிர்சேமிப்பகம் அல்லது காப்பீடு ஊக்கத்தொகை ஆகியவை இந்த இடைவெளியை நீக்க உதவலாம்.  இந்த ஆய்வு ஸ்டெம் செல் ரிசர்ச் அண்டு தெரபி (Stem Cell Research & Therapy) என்கிற இதழில் வந்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்க  ஒரு எளிய முறை

பூமியில் கிடைக்கும் தண்ணீர் பெரும்பாலும் கடலில் உப்பு நீராக உள்ளது. உப்புநீக்கி கருவிகளால்(Desalination plants)இதை குடிநீராக்கலாம். ஆனால் அதற்கு பெரும் அளவில் மின் ஆற்றல் தேவைப்படும். இப்போது ஆய்வாளர்கள் சி ஷென் குழுவினர் நுரை பஞ்சு(sponge) போன்ற பொருளால் ஆன நுண்ணிய காற்றுப் பைகளை உண்டாக்கி அதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி கடல்நீரை குடிநீராக்கும் முறையை அறிவித்துள்ளார்கள்.  இதற்கு முன் பாலிமர்களைக் கொண்ட ஹைடிரோஜெல் மூலம் நன்னீராக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவை குழைவுத்தன்மை கொண்டதும் திரவம் நிரம்பியதாகவும் இருந்தது. பின்னர் ஏரோஜெல் பரிசோதிக்கப்பட்டது. அவை உறுதியாக இருந்தன. ஆனால் கருவியின் அளவு பெரிதாகும் போது அவற்றின் திறன் குறைந்தது.  சி ஷென் குழுவினர் கார்பன் நானோ குழாய்களையும் செல்லுலோஸ் நானோ இழைகளையும் சேர்த்து உண்டாக்கிய ஒரு பசையை 3டி முறையில் அச்சில் வார்த்தனர். இது சீராக அமைக்கப்பட்ட 20 மைக்ரோமீட்டர் அளவில் செங்குத்து குழாய்களாக அமைந்தன. கடல் தண்ணீர் கொண்ட ஒரு குவளையில் இந்த அமைப்பை வைத்து அதை வளைவான பிளாஸ்டிக் தாளால் மூடினர். சூரிய ஒளியில் நுரைபஞ்சுப் பொருள் சூடாகி தண்ணீர் மட்டும் ஆவியானது. பின் மூடப்பட்ட தாளில் நல்ல நீராக சேர்ந்து குவளைக்கு கீழே வைக்கப்பட்ட கலனில் சேமிக்கப்பட்டது. இப்போது வடிவமைக்கப்பட்ட கருவி எந்த அளவிலும் முழு திறனுடன் இயங்குகிறது. எனவே எளியதாகவும் பெரும் அளவிலும் ஆற்றல் தேவைப்படாத வகையிலும் உப்பு நீரை குடி நீராக்கும் முறை இது என்கிறார் ஆய்வாளர் ஷென்.  சீன தேசிய இயற்கை அறிவியல் கழகம், ஹாங்காங் ஆய்வு நிதிக் கழகம் மற்றும் ஹாங்காங் சுற்றுசூழல் பேணுதல் நிதி ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஏசிஎஸ் எனர்ஜி லெட்டர்ஸ் (ACS Energy Letters) என்கிற இதழில் வந்துள்ளது.

பாம்புக்கடிக்கு  ஒட்டகக் கண்ணீர்

மண்டலத்திலும் உள்ள எதிர்ப்பு பொருள்(antibodies) பாம்பு விஷத்தை முறிக்கும் என்று பிகானீரிலுள்ள தேசிய ஒட்டக ஆய்வு மையம்( National Research Centre on Camel (NRCC) கண்டுபிடித்துள்ளது. இந்த ஆய்வாளர்கள் கொடிய நச்சுத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பின் விஷத்தை ஒட்டகத்திற்கு செலுத்தி அதனுள் விஷ எதிர்ப்பு தன்மையை உண்டாக்கினர். அதன்பின் அதன் கண்ணீரிலிருந்தும் இரத்தத்திலிருந்தும் எடுக்கப்பட்ட எதிர்பொருள் பாம்பு விஷத்தின் கொடிய விளைவுகளான இரத்தக்குழாய் முறிவு மற்றும் இரத்த உறைதலுக்கு எதிராக திறனுடன் செயல்படுவது தெரிந்தது. குறிப்பாக இந்த எதிர்ப்பொருள் குறைவான ஒவ்வாமை வினைகளை தோற்றுவித்தன. மேலும் அதிக செலவு பிடிப்பதும் சிக்கலானதுமான குதிரையிலிருந்து எடுக்கப்படும் வழமையான விஷ எதிர்ப்பொருள் இம்முனோகுளோபுலின்(immunoglobulin (IgG) விட மிக திறன் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக்கடியால் 58000 மரணங்களும் 140000 ஊனங்களும் நிகழ்கின்றன. இது உலகளவில் அதிக எண்ணிக்கையாகும். பாம்புக்கடி அதிகம் நிகழ்வதும் மருத்துவ சிகிச்சை தாமதப்படுவதுமான கிராமப்புறங்களில் இந்த கண்டுபிடிப்பு சிக்கனமானதும் பாதுகாப்பானதும் பெருமளவில் விரிவுபடுத்தக்கூடியதுமாகும்.  பிகானீர், ஜெய்சால்மர், ஜோத்பூர் போன்ற பகுதிகளில் வாழும் ஒட்டக வளர்ப்பாளர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கும். இந்திய சீரம் நிறுவனமும் தனியார் மருந்து உற்பத்தியாளர்களும் ஒட்டக எதிர்ப்பொருளை தீவிரமாக வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றில் உள்ளூர் உயிரினங்கள் அதிகம் பயன்படுத்தப்படாததை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.